ஓடும் ரயிலில் 4 பேர் சுட்டுக் கொலை.... சர்ச்சைக்குரிய ஆர்பிஎஃப் காவலர் பணியில் இருந்து அதிரடியாக நீக்கம்!


பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள சேத்தன் சிங்.

ஜெய்ப்பூர்- மும்பை ரயிலில் நான்கு பேரைச் சுட்டுக்கொலை செய்த ஆர்பிஎஃப் காவலர் சேத்தன் சிங் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை 31-ம் தேதி அதிகாலையில் ஜெய்ப்பூர்-மும்பை அதிவிரைவு விரைவு ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் (ஆர்பிஎஃப்) சேத்தன் சிங் பயணம் செய்தார். அப்போது திடீரென அவர் கோச்சில் இருந்த நான்கு பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து மும்பை சென்ட்ரல் ஸ்டேஷனில் சேத்தன் சிங் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்ப்பட்டு போரிவாலி நீதிமன்ற உத்தரவுபடி மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சேத்தன் சிங் துப்பாக்கிச் சூடு நடத்தியது தொடர்பாக ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தினர். இதன் முடிவில், சேவை விதிகளை மீறல், அரசு ஆயுதங்களைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சேத்தன் சிங் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பணிநீக்கம் செய்யப்பட்ட சேத்தன் சிங் உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்தவர். கடந்த மார்ச் மாதம் பாவ்நகர் ரயில்வே கோட்டத்தில் இருந்து மும்பைக்கு அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். இதன் காரணமாக மன அழுத்தத்தின் சேத்தன் சிங் இருந்ததாக கூறப்படுகிறது.

துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த அன்று, ரயிலில் பர்தா அணிந்த பெண்ணிடம் இந்துத்துவ முழக்கங்களை எழுப்பும்படி சிங் கட்டாயப்படுத்தியதாக கூறப்படும் விவகாரம் குறித்து ரயில்வே காவல்துறை விசாரித்து வருகிறது.

அத்துடன் துப்பாக்கிச்சூடு நடந்த சில மணி நேரங்களில் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலானது. இதில் துப்பாக்கியால் சுட்டு இறந்து கிடந்தவரின் அருகில் நின்ற சேத்தன் சிங், வகுப்புவாத கருத்துக்களைக் கூறுவது போன்ற அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது. ஆனால், இந்த வீடியோவின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்க முடியவில்லை என ரயில்வே போலீஸார் கூறியுள்ளனர்.

x