மோதலுக்கு முற்றுப்புள்ளி; சாதிய அடையாளங்களை அழித்த கிராம மக்கள் - மாவட்ட கண்காணிப்பாளர் பாராட்டு!


பாலாஜி சரவணன்

தூத்துக்குடி மாவட்டத்தில் சாதிய வன்முறை மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கிராமங்களில் இருந்த ஜாதிய அடையாளங்களை கிராம மக்கள் தாங்களாகவே அழித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி உட்கோட்டம் புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சவலாப்பேரியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் அனைத்து சமுதாய மக்களை ஒன்றிணைக்கும் வகையில் சமூக நல்லிணக்கம் மற்றும் மாற்றத்தை தேடி கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புளியம்பட்டி அக்காநாயக்கன்பட்டி, ஒட்டுடன்பட்டி, பூவாணி, சவலாப்பேரி, ஆலந்தா, சிங்கத்தாகுறிச்சி, காசிலிங்காபுரம், கொடியன்குளம், நாரைக்கிணறு, மருதன்வாழ்வு மற்றும் கொல்லங்கிணறு கிராமங்களைச் சேர்ந்த அனைத்து சமுதாய பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வன்முறையை தடுக்கவும், சமுதாய நல்லிணக்கத்தை மேம்படுத்தவும் அனைத்து கிராமங்களிலும் அனைத்து சமூக மக்களும் சகோதரத்துவ உணர்வுடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று கூறினார். மேலும், கிராமங்களில் அனைத்து சமூக மக்களும் பயன்படுத்தும் பொது இடங்களிலும், கல்வி நிலையங்களிலும் வன்மத்தைத் தூண்டக்கூடிய சாதிய அடையாளங்களை அறவே நீக்கி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்றும், அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.

இதன் பயனாக நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு மணியாச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் லோகேஸ்வரன் உள்ளிட்ட காவல்துறையினர் முன்னிலையில் ஆலந்தா கிராமத்தில் ஊர் நாட்டாமை மணிமுருகன், சின்னத்துரை, சுடலைமணி, சரஸ்வதி உள்ளிட்ட ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பெரியவர்கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் கிராமத்தில் பொது இடங்களில் இருந்த சாதிய அடையாளங்களை அழித்தனர்

இதேபோல் சிங்கத்தாகுறிச்சி கிராமத்தில் கிராம நாட்டாமை பெருமாள் மற்றும் முருகன் உள்ளிட்ட ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பெரியவர்கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் கிராமத்தில் பொது இடங்களில் இருந்த சாதிய அடையாளங்களை அழித்தனர்.

மேலும், காசிலிங்காபுரம் கிராமத்தில் கிராம நாட்டாமை விஜி, சின்னத்துரை பத்ரன், பஞ்சாயத்து துணை தலைவர் முத்துகிருஷ்ணன் மற்றும் அய்யாத்துரை உள்ளிட்ட ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பெரியவர்கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் கிராமத்தில் பொது இடங்களில் இருந்த சாதிய அடையாளங்களை அழித்தனர்.

சாதிய அடையாளங்களை தாமாக முன்வந்து அழித்த கிராம மக்கள் அனைவருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக தனது பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார்.

x