முதுகுளத்தூர் அருகே சுதந்திர தின கொடியேற்ற விழாவில் பங்கேற்று விட்டு, வீடு திரும்பிய பள்ளி மாணவனை வெறிநாய் ஒன்று கடித்துக் குதறியது. இதில் ஏற்பட்ட காயத்தால் அந்த மாணவனின் கையை அகற்றும் சூழல் உருவாகியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ளது காக்கூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த திருமுருகன் என்பவரின் மகன் கவன்ராஜ்(7). இந்த சிறுவன் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறான்.
இந்நிலையில் சுதந்திர தினமான நேற்று பள்ளியில் நடந்த கொடியேற்று நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பியுள்ளான் மாணவன் கவன்ராஜ். அவ்வழியே சுற்றி திரிந்த வெறிநாய் ஒன்று மாணவன் மீது திடீரென பாய்ந்து கடித்துள்ளது. இதனால் அலறி துடித்த மாணவனின் குரலை கேட்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள் நாயின் மீது கற்களை வீசி அந்த மாணவனை காப்பாற்றினர்.
மாணவன் கவன்ராஜின் இடது கையில் வெறிநாய் கொடூரமாக கடித்த நிலையில் அவனது இடது கையில் பெரும் காயம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
வெறிநாய் கடிக்கு ஆளான அந்த மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவனின் இடது முழங்கைக்கு மேல் கடுமையான காயம் ஏற்பட்டிருப்பதால் சிறுவனின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க காயம் பட்ட கையினை அகற்ற வேண்டிய நிலை உள்ளதாக கூறினர் என அந்த மாணவரின் பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது.