பகீர் வீடியோ... சிக்கன் க்ரேவியில் மிதந்த எலிக்கறி! பிரபல உணவகத்தின் நிர்வாகி, சமையலர் கைது!


சிக்கன் பெயரில் பரிமாறப்பட்ட எலிக்கறி

இந்தியாவின் பிரபல உணகம் ஒன்றில் சிக்கன் க்ரேவியில் பரிமாறப்பட்ட எலிக்கறி காரணமாக, அந்த உணவகத்தின் மேனேஜரையும், சமையல்காரரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

மும்பையின் பாந்த்ரா பகுதியில், பிரபல உணகமான ’பஞ்சோ தா தாபா’ என்ற சங்கிலித் தொடர் அசைவ உணவகத்தின் கிளை ஒன்று செயல்படுகிறது. அங்கே இரவு உணவுக்காக அனுராக் திலீப் சிங் என்பவர் தனது நண்பர் அமின் கான் உடன் சென்றிருந்தார். தனியார் நிறுவனங்களில் உயர் பதவிகளை வகிக்கும் இருவரும், அந்த உணவகத்தில் சிக்கன், மட்டன் என விதவிதமான உணவுகளை ஆர்டர் செய்து வரிசையாக உண்டு வந்தனர்.

அப்போது அனுராக் திலீப்பின் சிக்கன் க்ரேவியில், சிக்கன் துண்டு ஒன்று வாலுடன் இருப்பதாக அவர் கூச்சலிட்டார். நண்பர்கள் இருவரும் அந்த அசைவத் துண்டத்தை தனியாக எடுத்து பரிசோதித்ததில் அது ஒரு எலி என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். பக்கத்து மேஜையில் உணவருந்தியவர்கள் உதவியுடன் தங்களது தரப்பை அவர்கள் உறுதி செய்துகொண்டனர்.

அதன் பின்னர் உணவகத்தின் ஊழியர்களை அழைத்து இருவரும் முறையிட்டனர். இந்த பஞ்சாயத்து உணவகத்தின் நிர்வாகி வரை சென்றது. சிக்கன் என்ற பெயரில் எலிக்கறி பரிமாறப்பட்டது தொடர்பான வாக்குவாதம் உச்சமடைந்ததில், அனுராக் திலீப் காவல்துறையினருக்கு தகவல் அளித்தார்.

விரைந்து சென்ற போலீஸார், சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் ’வாடிக்கையாளர்கள் இருவரின் புகார் அடிப்படையில் உணவகத்தின் மேலாளர் மற்றும் சமையலர் ஆகிய இருவரை கைது செய்திருப்பதாகவும், எலிக்கறி புகாருக்கு ஆளான சிக்கன் உணவை பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும்’ தெரிவித்தனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் சமூக ஊடகங்களில் எலிக்கறி தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ பகிரப்பட்டு, அவை வைரலாகி வருகின்றன. இதற்கிடையே உணவகத்தின் சார்பில் அதன் வழக்கறிஞர் விடுத்துள்ள செய்தியில், “போதையில் உணவகம் வந்த இருவரால், 22 வருடங்களுக்கும் மேலாக புகாரின்றி செயல்படும் உணவகத்தின் நற்பெயருக்கு குந்தகம் விளைந்துள்ளதாகவும், சம்மந்தப்பட்ட இருவரும் உணவக நிர்வாகியை பிளாக் மெயில் செய்து பணம் பறிக்க முயன்றதாகவும்” விளக்கம் தந்துள்ளனர்.

x