தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அடுத்த மேல பூவாணியை சேர்ந்தவர் முருகன்(50). இவர் அதே பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக, கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் இன்று குற்றவாளியான முருகன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக அறிவித்தார். மேலும், அவருக்கு 20 வருடங்கள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூபாய் 10,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாரியம்மாள், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலெட்சுமி, விசாரணைக்கு உதவியாக இருந்த பெண் காவலர் ஜெபமேரி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் மகேஸ்வரி ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.