பெரம்பூர் ரயில் நிலையத்தில் வட மாநில இளைஞரை கன்னத்தில் அறைந்த பெண் டிக்கெட் பரிசோதகர் மற்றும் அவரது அதிகாரி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் முதலாவது நடைமேடை முடியும் இடத்தில், வடமாநில இளைஞர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த டிக்கெட் பெண் பரிசோதகர் அக்சயா, அந்த இளைஞரிடம் பிளாட்பாரம் டிக்கெட் கேட்டுள்ளார்,
அவரிடம் டிக்கெட் இல்லாததால் அபராதம் செலுத்துமாறு கூறியுள்ளார். அதற்கு அந்த வடமாநில இளைஞர், தான் ரயில்வே எல்லையை ஒட்டிய பகுதியில் தான் நின்றதாகவும், தன்னிடம் அபராதம் செலுத்துவதற்கு பணம் இல்லை என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து அந்த இளைஞரை டிக்கெட் பரிசோதகர் அக்சயா, தனது அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரித்துள்ளார். அப்போது வடமாநில இளைஞர் இந்தியில் பேசியதை கேட்டு கடுப்பான டிக்கெட் பரிசோதகர் அக்சயா அவரிடம், "இது எங்க ஊரு... தமிழில் பேசுடா" எனக் கூறி அபராதம் கட்டு என மிரட்டினார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த டிக்கெட் பரிசோதகர் அக்சயா, அந்த இளைஞரை கன்னத்தில் அறைந்தார்.
இந்த காட்சியை அங்கிருந்த ரயில் பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெண் டிக்கெட் பரிசோதகர் அக்சயா மற்றும் அவரது அதிகாரி ஹரிஜான் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து தெற்கு ரயில்வே துணை மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.