மைத்துனர் விபத்தில் இறந்த துக்கத்தில் மின்கம்பியைப் பிடித்து இளைஞர் தற்கொலை: தேனி அதிர்ச்சி


படம்:ஆனந்தராஜ்.

உத்தமபாளையம்: மைத்துனர் விபத்தில் இறந்த துக்கம் தாளாமல் மின் கம்பியைப் பிடித்து இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பாறை மேட்டு தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராணி. இவர்களது மூத்த மகன் சாம் நிஜந்தன் (27). இவரது மைத்துனர் ஆனந்தராஜ் (30). சாம் நிஜந்தனும், ஆனந்தராஜும் உயிருக்கு உயிரான நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.

சாம் நிஜந்தன் நேற்று உத்தமபாளையத்திலிருந்து தனது நண்பரை தேவாரத்தில் கொண்டு விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் தேவாரம் சென்றுள்ளார். பின்னர் நண்பரை அங்கு இறக்கி விட்டுவிட்டு மீண்டும் உத்தமபாளையம் நோக்கி வந்தபோது கருக்கோடை என்ற பகுதியில் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதியதில் சாம் நிஜந்தன் பலத்த காயம் அடைந்தார்.

அவ்வழியாகச் சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலமாக சாம் நிஜந்தனை உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சாம் நிஜந்தனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக கோம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சாம் நிஜந்தன் விபத்தில் இறந்த செய்தியைக் கேட்ட அவரது மைத்துனர் ஆனந்தராஜ் துக்கம் தாளாமல் வேதனையில் கதறித் துடித்துள்ளார். இதனால் மீளமுடியாத மன அழுத்தத்தில் இருந்த அவர், இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் முன்புறம் உள்ள மின் கம்பத்தின் மீது ஏறி உயர் அழுத்த மின் கம்பியைப் பிடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் ஆனந்தராஜின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மைத்துனர் இறந்த துக்கம் தாளாமல் இளைஞர் மின் கம்பத்தில் ஏறி மின் கம்பியைப் பிடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உத்தமபாளையம் பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 - 24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.

x