கடன் தொல்லையால் விபரீத முடிவு எடுத்த ஆட்டோ ஓட்டுநர்: ராணிப்பேட்டை அருகே பயங்கரம்


ராஜி

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே கழுத்தை நெறித்த கடன் தொல்லையால் தனது இரு மகள்களை தூக்கிலிட்டும், ஆட்டோ ஓட்டுநர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று சலசலப்பை ஏற்படுத்தியது.

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் அடுத்த கீழ்வேலம் கிராமம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜி (45), ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி இந்திரா (38). தம்பதியருக்கு இரு மகள்கள். மூத்த மகள் அகல்யா (22), பிளஸ் 2 முடித்து விட்டும், இளைய மகள் சரண்யா (17), 7-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், ராஜி தனது வீட்டை சோளிங்கரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்து அடமானம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர பல்வேறு நிதி நிறுவனங்களில் மொத்தமாக 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.

பல இடங்களில் வாங்கிய கடனை முறையாக செலுத்த முடியாமல் ராஜி அவதிப்பட்டு வந்தார். நாளுக்கு நாள் கடன் தொல்லை அதிகரித்துள்ளதால், தனது இரு பெண் பிள்ளைகளுக்கு எவ்வாறு திருமணம் செய்து வைப்பது, இனி வாழ்வது மிகவும் சிரமம் என ராஜி மற்றும் அவரது மனைவி வேதனையடைந்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளலாம் என ராஜி, தனது மனைவி மற்றும் இரு மகள்களிடம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் இடையே இரவு முழுவதும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இறுதியாக, மகள்களை முதலில் தூக்கிலிட்டும், அதன் பிறகு தானும் தற்கொலை செய்துக்கொள்ளலாம் என ராஜி முடிவு எடுத்துள்ளார்.

அதன்படி, வீட்டில் உள்ள அறையில் மகள்கள் இருவருக்கும் புடவையால் தூக்குமாட்டி, நாற்காலியை இழுத்து விட்டுள்ளார். இதனை கண்டு மனைவி இந்திரா, ராஜியை தடுத்துள்ளார். வீட்டில் அலறல் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர்.

தூக்கில் தொங்கியபடி உயிருக்கு போராடிய இரு பெண்களையும் மீட்டு, வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக இருவரும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இதற்கிடையே, வீட்டில் இருந்து தப்பிச்சென்ற ராஜி மருதாலம் ரயில்வே தண்டவாள பாதைக்கு சென்றார். அப்போது, அவ்வழியாக சென்ற காட்பாடி -சென்னை செல்லும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த காட்பாடி ரயில்வே காவல் துறையினர் விரைந்து வந்து உயிரிழந்த ராஜியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இரு பெண்கள் தூக்கிலிட முயற்சி செய்தது தொடர்பாக ராணிப்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் நேற்று சலசலப்பை ஏற்படுத்தியது.

x