கிருஷ்ணகிரி பள்ளி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: மதபோதகர் கைது


கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் வழக்கில், மதபோதகரை போலீஸார் கைது செய்தனர்.

பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் நடந்த போலி என்சிசி முகாமில், மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்தது. இது குறித்து பர்கூர் மகளிர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான சிவராமனின் நெருங்கிய நண்பரும், அவரது குற்றச்செயல்களுக்கு உறுதுணையாக இருந்த, காவேரிப்பட்டணம் கொசமேடு பகுதியைச் சேர்ந்த ஜிம் மாஸ்டரும், மதபோதகருமான டேனியல் அருள்ராஜ் (43) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

இதுதொடர்பாக போலீஸார் கூறும்போது, “சிவராமன் நடத்திய போலி என்சிசி முகாம், தொண்டு நிறுவனம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கும் டேனியல் அருள்ராஜ் உறுதுணையாக இருந்துள்ளார். இவர் மீது பல்வேறு புகார்கள் வந்துள்ளன. இதுதொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது” என்றனர்.

இவ்வழக்கில் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளியான சிவராமன் கைதுக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர் எலி பசை சாப்பிட்டு, கைதுக்குப் பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

x