காருக்குள் வைத்து மனைவியின் கழுத்தை நெரித்து துள்ளத்துடிக்க கொன்ற நபர், குற்றத்துக்கு சாட்சியான இரு குழந்தைகளையும் கொல்ல முற்படும் போது, போலீஸாரால் வளைக்கப்பட்டிருக்கிறார். இந்த அதிர்ச்சி சம்பவம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறி இருக்கிறது.
உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூரில் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசிப்பவர் ராகுல் மிஸ்ரா. இவர் லக்னோ-பூர்வாஞ்சல் விரைவு சாலையில் காருக்குள் வைத்து, இரு குழந்தைகள் முன்னிலையில் தனது மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
ஞாயிறு அன்று ரேபரேலிக்கு செல்வதாக லக்னோவில் இருந்து, குடும்பத்தை காரில் அழைத்துக்கொண்டு விரைந்த ராகுல் மிஸ்ரா, லக்னோ - பூர்வாஞ்சல் விரைவு சாலையில் செல்லும்போது அந்த விபரீத முடிவினை எடுத்திருக்கிறார். சீர் என்ற கிராமத்தை கடக்கையில் ஆள் நடமாட்டம் இல்லாத இடமாக பார்த்து காரை நிறுத்தியவர், திடீரென மனைவி மோனிகா குப்தாவின் கழுத்தை நெரிக்க ஆரம்பித்தார். குழந்தைகள் அதிர்ச்சியில் உறைந்துபோய் அலற, மனைவி சுதாரித்து எதிர்வினையாற்றுவதற்குள் அவரது கழுத்தை வெறி கொண்ட மட்டும் நெரித்துக் கொன்றார்.
அவ்வழியே வாகனத்தில் கடந்து சென்றவர்கள், ரோந்து போலீஸாருக்கு அவரச அழைப்பு விடுக்க, அவர்கள் விரைந்து வந்து ராகுல் மிஸ்ராவை மடக்கினார்கள். அதற்குள் மோனிகா பிணமாகி இருந்தார். போலீஸார் விசாரணையில், மனைவியின் நடத்தையில் நீண்ட நாட்களாக சந்தேகம் கொண்டிருந்ததாகவும், அது தொடர்பான மன உளைச்சல் அதிகரித்ததில் திடீரென மனைவியை கழுத்தை நெரித்துக்கொன்றதாகவும் ராகுல் மிஸ்ரா தெரிவித்திருக்கிறார்.
மேலும், குற்றத்துக்கு சாட்சியான 12 வயதாகும் மகள் அன்ஷிகா, 6 வயதாகும் அதர்வா என தனது இரு குழந்தைகளையும் அடுத்துக் கொல்லவும் திட்டமிட்டிருந்ததாக ராகுல் மிஸ்ரா தெரிவித்திருக்கிறார். நெடுஞ்சாலை ரோந்து போலீஸார் சம்பவ இடத்தை சரியான நேரத்தில் எட்டியதன் மூலமாக, இரு குழந்தைகளும் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர். ராகுல் மிஸ்ராவை கைது செய்த குரேபார் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.