அதிர்ச்சி! மதிய உணவு சாப்பிட்ட 64 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு; மருத்துவமனையில் அட்மிட்


ஆந்திரா அரசுப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு

ஆந்திர மாநிலத்தில் அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 64 மாணவர்களுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் உடனடியாக அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தமிழ்நாட்டில் உள்ளது போலவே ஆந்திர மாநிலத்திலும் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள அன்னமையா மாவட்டத்தில், தெக்குலபாலம் கிராமத்தில் அரசு ஆரம்பப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

நேற்று இங்கு பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு தயாரித்து ஊழியர்கள் வழங்கி உள்ளனர். இதனை சாப்பிட்ட 64-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அடுத்தடுத்து திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திர அரசுப்பள்ளி மாணவர்கள் 64 பேருக்கு அடுத்தடுத்து உடல்நலக்குறைவு (கோப்பு படம்)

மாணவர்கள் சிலர் சமைக்கப்பட்ட உணவில் பல்லி விழுந்து உள்ளதாக தெரிவித்ததால் பரபரப்பு அதிகரித்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் உடனடியாக பாதிக்கப்பட்ட மாணவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் உணவில் விஷம் இல்லை என்பதை உறுதி செய்துள்ளனர். இருப்பினும் எதனால் மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது என்பது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக பள்ளியில் விசாரணை மேற்கொண்டுள்ள மாவட்ட வருவாய் அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உணவு சமையலர்களிடம் விசாரணை நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தால் ஆந்திராவில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

x