சென்னை: காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்திலிருந்து ரூ.10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டம், திருமலைப் பிள்ளை சாலையில் ஏடிஎம் மையத்தில் நேற்று முன்தினம் இரவு பணம் செலுத்தும்போது, இரு நபர்களுக்குள் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
பின்னர் அவர்களில் ஒருவர் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்று நுங்கம்பாக்கம் காவல் நிலைய வளாகத்தில் யாரிடமும் சொல்லாமல் விட்டுவிட்டு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த ஹமீது என்பவர் தனது நண்பர்கள் இருவருடன், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு சென்று அந்த வாகனத்தை எடுக்க முயன்றுள்ளார்.
அப்போது பணியில் இருந்த காவலர்கள், வாகனத்தின் ஆவணங்களை கொண்டு வருமாறு தெரிவித்துள்ளனர். மேலும் ஹமீதிடம் இருந்த இருசக்கர வாகனத்தின் சாவியை வாங்கி சந்தேகத்தின் பேரில் பெட்டியை திறந்து பார்த்தபோது, அதில் ரூ.10 லட்சம் ரொக்கம் இருந்தது.
ஆனால், அதற்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீஸார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஏடிஎம் மையத்தில் நடந்த தகராறு தொடர்பாகவும், போலீஸ் நிலையத்துக்கு ஏன் இருசக்கர வாகனம் கொண்டு வரப்பட்டது, தகராறில் ஈடுபட்ட நபர்கள் யார் யார், பறிமுதல் செய்யப்பட்டது ஹவாலா பணமா என்பது குறித்தும் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.