ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீது, தமிழக அரசின் விரைவுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 2 பெண்கள் உயிரிழந்தனர்.
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு அரசு போக்குவரத்து கழக சொகுசு பேருந்து ஒன்று கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்றுகொண்டிருந்தது. அப்போது, கீழக்கரை பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே பேருந்து வந்தபோது, எதிர்பாரா விதமாக லாரி ஒன்று குறுக்கிட்டதாக தெரிகிறது. இதனால், ஓட்டுநர் பேருந்தை திருப்ப முயன்றபோது, அது கட்டுப்பாட்டை இழந்து, அந்த பகுதியில் பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீது மோதியது. மேலும், அருகே இருந்த சுவரை உடைத்துக்கொண்டு சாலை ஓரம் இருந்த பனை மரத்தின் மீது மோதி நின்றது.
இந்த சம்பவத்தில் இரண்டு பெண்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொண்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பேருந்துக்காக காத்திருந்த பெண்கள் மீது மோதிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.