சுடுகாட்டில் தூக்கிட்டு மரித்த புது மாப்பிள்ளை; திருமணமான ஒரே மாதத்தில் மர்மம்


திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த கோவிலூரில் உள்ள சுடுகாட்டில் வாலிபர் ஒருவர் தூக்கிட்ட நிலையில் இறந்துகிடந்தார். இதனைப்பார்த்த அப்பகுதியை சேர்ந்தோர், உடனடியாக காவல் துறைக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசர் வாலிபரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் நடத்திய விசாரணையில், தற்கொலை செய்துகொண்டது, முத்துப்பேட்டையை அடுத்த கோவிலூர் வடக்காட்டை சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகன் சந்தோஷ்(20) என்பது தெரியவந்தது.

மேலும், இவர் மங்கலூரை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அதன் காரணமாக அந்த பெண் கர்ப்பிணியானதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி சந்தோஷிடம் கேட்டபோது, அதற்கு மறுத்துள்ளார். இதனையடுத்து, அந்த பெண் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் காதலித்து, கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றுவதாக புகார் அளித்தார்.

இந்த புகாரை விசாரித்த போலீஸார், இரு குடும்பத்தினரையும் அழைத்து பேசி சமரசம் செய்தனர். இதனையடுத்து, இருவீட்டாரும் இணைந்து கடந்த ஒரு மாதத்திற்கு முன் சந்தோஷுக்கும் அவரது காதலிக்கும் திருமணம் செய்து வைத்தனர். பின்னர் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், சந்தோஷ் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

எதற்காக சந்தோஷ் தற்கொலை செய்து கொண்டார்? வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். திருமணமான ஒரு மாதத்தில் வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

x