திருவண்ணாமலை மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டிகளை குறிவைத்து கொள்ளையடித்து வரும் கும்பலால் மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரில் உள்ள மேலப்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் அருகே வசித்து வருபவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி சென்னம்மாள் வயது (70). சம்பவத்தன்று காலை சென்னம்மாள் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, அவரது வீட்டிற்கு பெண் உட்பட 3 பேர் காரில் வந்துள்ளனர். பாலகிருஷ்ணனின் தூரத்து உறவினர்கள் என சென்னம்மாளிடம் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்ட அந்த மர்ம நபர்கள், உங்கள் கணவர் பாலகிருஷ்ணனிடம் பெற்ற ஆயிரம் ரூபாய் கடனை திருப்பி தர வந்ததாக கூறியுள்ளனர்.
என்ன ஏது என்று முழுதாக விசாரிக்காத சென்னம்மாள், அவர்கள் கொடுத்த பணத்தை வாங்கியுள்ளார். அதனை வாங்கிய அவர் சில நிமிடங்களிலேயே மயக்கம் போட்டு விழுந்தார். இதுதான் சமயம் என காத்திருந்த அந்த கும்பல் வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு காரில் தப்பியது.
மயக்கம் தெளிந்து எழுந்த சென்னம்மாளுக்கு வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 7 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக சென்னமாள் கூச்சலிட்டவாரே வீட்டின் வெளியே ஓடிவந்துள்ளார். வீட்டருகே உள்ள நபர்களிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். அவர்கள் உடனடியாக மூதாட்டியை செங்கம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று புகார் அளித்தனர்.
இதுதொடர்பாக சென்னம்மாளிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொள்ளையடித்து தப்பிய கும்பல் ரூபாய் நோட்டில் மயக்க மருந்து தடவி அவரிடம் கொடுத்து, அவரை மயக்கம் அடைய செய்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதேபோல், செங்கம் அருகே உள்ள கரியமங்கலம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த ஒரு மூதாட்டியிடம் உறவினர் என்று கூறிக்கொண்டு புகுந்த பெண், நலம் விசாரிப்பதுபோல் 8 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்துக்கொண்டு தப்பியுள்ளார்.
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஆண்களுடன் காரில் வந்து தனியாக வசிக்கும் பெண்கள் உள்ள வீட்டை நோட்டமிட்டு கொள்ளையடிப்பதை இந்த கும்பல் வழக்கமாக வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இந்த கொள்ளையில் தொடர்புடைய பெண் அரூர் பகுதியை சேர்ந்தவர் என்றும் அவர் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. காவல்துறையினர் இது குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். தனியாக இருக்கும் முதியவர்களை குறிவைத்து இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் நடப்பதால் செங்கம், கலசபாக்கம் பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.