குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்! தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அச்சம்!


சிறுத்தை நடமாட்டம்

தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டத்தால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் மேகமலை வனப்பகுதி அமைந்துள்ளது. தனியார் தேயிலை தோட்ட நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள இந்த வனப்பகுதியில் இரவங்கலாறு, வென்னியாறு, மகாராசா மெட்டு உள்ளிட்ட ஏழு மலை கிராமங்களில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மூன்று தினங்களாக மகாராச மெட்டு மற்றும் வென்னியாறு மலைக்கிராமத்தில் உள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் இரவு நேரங்களில் தொடர்ந்து சிறுத்தைகள் நடமாடியதுடன் தொழிலாளர்கள் வீட்டில் வளர்க்கும் கோழிகளையும், செல்லப்பிராணியான நாய் குட்டிகளையும் வேட்டையாடிச் சென்றுள்ளது.

இரவு நேரங்களில் தொடர்ந்து உலா வரும் சிறுத்தையின் நடமாட்டத்தால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் இது குறித்து வனத்துறையினர் துரித நடவடிக்கை எடுத்து சிறுத்தையினை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை வைத்துள்ளனர்.

x