ஊத்தங்கரை அடுத்த கங்கானூரை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர், காவல் உதவி ஆய்வாளர் தனக்கு மிரட்டல் விடுத்ததாக கூறி பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கங்கானூரை சேர்ந்த ராம்குமார். இவருக்கு விஜயா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில மாதங்களாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் ராம்குமார் மீது அவரின் மனைவி விஜயா சாமல்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மனைவி விஜயாவின் புகாரின் அடிப்படையில் ராம்குமாரை சாமல்பட்டி உதவி ஆய்வாளர் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதனால், மனமுடைந்த அவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து தனது வீட்டில் உள்ளவர்களிடம் அவர் கூறியதை தொடர்ந்து, அவரை குடும்பத்தினர் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமத்தினர். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.