அட கொடுமையே... அதிமுக தலைமை அலுவலகத்தில் பெண் போலீஸாரின் பைகள் திருட்டு!


பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸார்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 4 ஆயுதப்படை பெண் காவலர்களின் பைகள் திருடு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று வருகை தந்தார். இதனை முன்னிட்டு அங்கு ஆயுதப்படை காவலர்கள் உட்பட ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஆயுதப்படை பெண் காவலர்கள் பேபி தர்ஷனா, பிரியதர்ஷினி, அபிநயா, ஐஸ்வர்யா தாரணி ஆகியோர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னதாக தங்கள் உணவு, ரெயின்கோர்ட், அடையாள அட்டை, வங்கி புத்தகம், ஆதார் கார்டு ஆகியவற்றை வைத்திருந்த பையை அதிமுக அலுவலகத்தில் உள்ள கலையரங்கம் பகுதியில் வைத்து விட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதன் பின் பணிமுடிந்து மதியம் அனைவரும் தங்களது பைகளை எடுக்கச் சென்றனர். அப்போது அவர்களது நான்கு பைகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்தனர். இதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பு பணிக்கு சென்ற பெண் காவலர்கள் நான்கு பேரின் பையை மர்மநபர்கள் திருடிய சம்பவம் காவலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x