பகீர்... எலிக்காய்ச்சலுடன் சென்ற குழந்தைக்கு வெறிநாய்க்கடி சிகிச்சை! அரசு மருத்துவமனையில் அவலம்!


ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை

எலிக்காய்ச்சால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு வெறிநாய்க்கடிக்கான சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்கள், ஒரு கட்டத்தில் சிறுவன் இறந்து விட்டதாக கூறிய நிலையில், கேரளம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பெற்றோர் சிறுவனைக் காப்பாற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தேரேக்கால் பகுதியைச் சேர்ந்தவர் தனிஷ். இவரது மனைவி ஷைனி. இந்த தம்பதிக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. ஜூலை 25ம் தேதி அந்த குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் உடல்சோர்வு ஏற்பட்டது. இதையடுத்து, நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள ஜெயசேகரன் மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது.

எந்தவித முறையான பரிசோதனையும் செய்யாமல், வெறிநாய்க்கடிக்கு சிகிச்சை அளிப்பதாக அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அங்கு குழந்தைக்கு வெறிநாய்க்கடி என கண்டறியப்பட்டு ரேபிஸ் நோய்க்கான சிகிச்சை அளித்ததாக தாய் ஷைனி தெரிவித்தார். ஒரு கட்டத்தில், குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் தாய் ஷைனி குற்றம் சாட்டியுள்ளார். குழந்தையின் கைகளில் அசைவு இருப்பதைக் கண்டுபிடித்த பெற்றோர் கேரளாவில் உள்ள நிம்ஸ் மருத்துவமனையில் குழந்தை அனுமதித்துள்ளனர்

இதனையடுத்து குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைக்கு எலி காய்ச்சல் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு குழந்தை தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொய்யான சிகிச்சை அளித்த ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை மீதும் தனியார் மருத்துவமனை மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

x