கிருஷ்ணகிரி அடுத்த மகாராஜகடை கள்ள நாயக்கன்பள்ளம் கிராமத்தில், விவசாய கிணற்றில் கடந்த 12ம் தேதி சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம், கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார், அந்த உடலை மீட்டனர். இறந்த நபர் யார் என்று அடையாளம் தெரியாத நிலையில், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், அந்த பகுதியில் காணாமல் போனவர்கள் யார், யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
இதில், அந்த பகுதியில் உள்ள ஆத்துகாவாய் என்னும் இடத்தைச் சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளி மைக்கேல்ராஜ் (36) காணாமல் போனது தெரிய வந்தது. இதுதொடர்பாக அவரது மனைவி ஜோஸ்பின் சிந்துவிடம்(28) போலீசார் விசாரித்த போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதனால், சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். இதில் மைக்கேல்ராஜை, ஜோஸ்பின் சிந்து மற்றும் அவரது காதலன் விக்ரம் (19) ஆகியோர் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான ஜோஸ்பின் சிந்து அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: மைக்கேல்ராஜின் சொந்த ஊர், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சின்னப்ப நகர்.
அவருக்கும், ஜோஸ்பின் சிந்துவுக்கும் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன், அவர்கள் ஆத்துகாவாய் பகுதிக்கு குடி வந்தனர். இங்கு மைக்கேல்ராஜ் கல் உடைக்கும் வேலைக்கு சென்று வந்தார். அவர் வேலை செய்த அதே குவாரியில், கிருஷ்ணகிரி தர்மராஜா நகரைச் சேர்ந்த சீனிவாசன் மகன் விக்ரமும்(19) வேலை செய்தார். அவர் அடிக்கடி மைக்கேல்ராஜின் வீட்டிற்கு வந்து ஜோஸ்பின் சிந்துவுடன் பேசுவார். இதில் அவர்களுக்குள் தகாத உறவு ஏற்பட்டது. மைக்கேல்ராஜ் வீட்டில் இல்லாத நேரத்தில், இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இது தெரிந்து மைக்கேல்ராஜ் மனைவியை கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஜோஸ்பின் சிந்து, கணவரை கொலை செய்து விட்டால், நமது உல்லாச வாழ்க்கைக்கு யாரும் குறுக்கே வர மாட்டார்கள் என விக்ரமிடம் கூறினார். அதன்படி சம்பவத்தன்று விக்ரமை வரவழைத்து 2 பேரும் சேர்ந்து மைக்கேல்ராஜை சரமாரியாக அடித்து கொலை செய்தனர்.
பின்னர், உடலை அங்கிருந்து கள்ளநாயக்கன் பள்ளம் பகுதிக்கு கொண்டு சென்று, கயிற்றால் உடலில் கல்லை கட்டி கிணற்றில் தூக்கி போட்டு விட்டனர். உடலில் கல்லை கட்டி கிணற்றில் போட்டால் உடல் மேலே வராது. யாருக்கும் தெரியாது என்று நினைத்துள்ளனர். ஆனால், உடல் மேலே வந்ததால் மாட்டிக் கொண்டனர் என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.