போதையில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்... நிர்க்கதியாக நிற்கும் பிள்ளைகள்


மதுபோதையில் மனைவியை கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 3 பிள்ளைகள் நிர்க்கதியாக நிற்பது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஆர்பாக்கத்தை சேர்ந்தவர் முனியம்மாள் (20). செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள்கோவில் பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன் (25). இந்த தம்பதிக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த தம்பதி ஆர்ப்பாக்கம் கிராமத்திலேயே கூலி வேலை செய்து கொண்டு தங்கள் குழந்தைகளுடன் வசித்து வந்தனர். மது பழக்கத்துக்கு அடிமையான புருஷோத்தமன், தினமும் குடித்து விட்டு வந்து மனைவியுடன் சண்டை போடுவது வாடிக்கையாக இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை 5.30 மணிக்கு நிதானம் தெரியாத அளவிற்கு மது போதையில் வந்த புருஷோத்தமன் தன்னுடைய மனைவி முனியம்மாளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது. இதில் ஆவேசமடைந்த புருஷோத்தமன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து முனியம்மாளின் கழுத்தில் வெட்டியுள்ளார். இதில் முனியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். தப்பி ஓட முயன்ற புருஷோத்தமனை பிடித்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து விரைந்து சென்ற காவல்துறையினர், முனியம்மாளின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் பின்னர் புருஷோத்தமனை கைது செய்து விசாரணை செய்தனர்.

மது பழக்கத்துக்கு அடிமையான புருஷோத்தமன், தன்னுடைய மனைவியை கொன்று விட்டு தானும் சிறைக்கு சென்ற நிலையில், அந்த மூன்று குழந்தைகளும் நிர்க்கதியாக நிற்கின்றன. இந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

x