உத்தரப்பிரதேசத்தில் தனியார் மருத்துவக்கல்லூரி ஒன்றில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவி தன்னுடன் விடுதியில் தங்கியிருந்த மாணவிகளை ஆபாசமாக புகைப்படங்களும், வீடியோவும் எடுத்து அதைக்காட்டி அவர்களை மிரட்டியுள்ளார். இதுதொடர்பாக 2 மாணவிகள் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் காஜிபூரில் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மந்தாஷா காஸ்மி என்ற மாணவி, தன்னுடன் விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகள் குளிக்கும் போது, உறங்கும் போது, உடை மாற்றும் போது அவர்களுக்கேத் தெரியாமல் ஆக.7-ம் தேதி ஆபாசமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து இரண்டாம் ஆண்டு மாணவர் முகமது அமீருக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
அத்துடன் தன்னுடைய அறை நண்பர்களுக்கும் அந்த புகைப்படங்கள் மற்றும் அந்த ஆபாச வீடியோக்களை அவர் பகிர்ந்துள்ளதாக புகார் எழுந்தது. மேலும் இந்த வீடியோ, புகைப்படங்களைக் காட்டி மந்தாஷா காஸ்மி சம்பந்தப்பட்ட மாணவிகளை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள், கல்லூரி நிர்வாகத்தினரிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டதில், அவர்களின் குற்றச்சாட்டு உண்மை எனத் தெரிய வந்தது. இதையடுத்து இரண்டு மாணவிகளை 6 மாதத்திற்கு கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.
மேலும். விசாரணைக்குழுவின் அறிக்கை ஒரு மாதத்தில் சமர்பிக்கப்பட்டபின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விடுதியில் தங்கியிருந்த சக மாணவிகளை ஆபாசமாக புகைப்படம், வீடியோ எடுத்து மாணவி மிரட்டிய விவகாரம் காஜிபூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.