அசாமில் 2 எருமை மாடுகளைத் திருட முயன்றதாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 6 பேரை போலீஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாமில் உள்ள ஹோஜாய் மாவட்டத்தில் உள்ள லிங்காவின் பமுங்கான் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 6 பேர் கொண்ட கும்பல் ஒருவரை சரமாரியாக தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
இதைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்திய போது அடித்துக் கொலை செய்யப்பட்டவர் ஹோஜாய் மாவட்டத்தைச் சேர்ந்த ஹிஃப்சுர் ரஹ்மான்(40) என்பது தெரிய வந்தது.
அவர் ஒரு வீட்டில் இரண்டு எருமை மாடுகளைத் திருட முயன்றதாக ஒரு கும்பல் அவர் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தியது தெரிய வந்தது.
இதையடுத்து கொலை செய்யப்பட்ட ஹிஃப்சுர் ரஹ்மான் குடும்பத்தினர் போலீஸில் நேற்று மாலை புகார் அளித்தனர். இதுதொடர்பாக போலீஸார் கொலையாளிகள் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது, ரஹ்மானை அடித்துக் கொலை செய்ததாக சஞ்சய் தாஸ், நிகில் தாஸ், துலேந்திர தாஸ், உத்தம் சக்ரவர்த்தி, ஜெயந்தா சக்ரவர்த்தி மற்றும் சந்து மஜூம்தார் ஆகிய 6 பேர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
எருமை மாடுகளைத் திருட முயன்றதாக ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அசாமில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.