கொடூரம்... வெப் சீரிஸ் பார்த்து கணவன், மனைவி கொலை, கொள்ளை... சட்ட மாணவர் உள்பட இருவர் கைது


அசுர் வெப்சீரிஸ்

உத்தரப்பிரதேசத்தில் தொழிலதிபர் தம்பதியைக் கொன்று வீட்டிலிருந்த தங்கம், வெள்ளியை கொள்ளையடித்த இரு இளைஞர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ’அசுர்’ என்ற வெப்சீரிஸ் பாதிப்பில் இந்த கொலை மற்றும் கொள்ளையை நிகழ்த்தியதாக அந்த இளைஞர்கள் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆக. 10 அன்று பிரம்மபுரி பகுதியில் வசிக்கும் குமார் ஜெயின் என்பவர் வீட்டில் புகுந்த இரு கொள்ளையர்களால், அவர் கடுமையாக தாக்கப்பட்டு கொலையானார். அப்போது வீட்டில் நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்நிலையில் கொள்ளையர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த குமார் ஜெயின் மனைவி அஞ்சு ஜெயின், மருத்துவ சிகிச்சை பலனின்றி அடுத்த நாள் இறந்தார். கொள்ளையர்களை துணிவுடன் எதிர்க்க முயன்றதில் 70 வயதாகும் குமார் மற்றும் 65 வயது அஞ்சு ஆகியோர் பலியாகி உள்ளனர்.

இந்த கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள் உத்தரபிரதேசத்தை உலுக்கியது. அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்விகளை எழுப்பினர். காவல்துறை துரிதமாக களத்தில் இறங்கி, 8 தனிப்படைகளை அமைத்து துப்புத்துலக்கியது.

அந்த வகையில், இருபதுகளின் மத்தியில் இருக்கும் இரு இளைஞர்கள் இன்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் வசமிருந்து குமார் ஜெயின் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. கைதான இளைஞர்களில் பிரியங் சர்மா என்பவர் சட்டக் கல்லூரியில் இறுதியாண்டு படிப்பவர். இன்னொரு இளைஞர் படிப்பை பாதியில் நிறுத்திய அவரது நண்பர் யாஷ் சர்மா.

அசுர் வெப் சீரிஸ்

இந்த இருவரும் கொள்ளை நிகழ்வுக்கான யோசனை மற்றும் வியூக உத்திகளை ’அசுர்’ என்ற வெப் சீரிஸ் வாயிலாக பெற்றதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளனர். 2020-ல் வெளியான இந்த இந்தி வெப் சீரிஸின் இரண்டாவது சீஸன், இந்த வருடம் ஜூன் முதல் வாரத்தில் ஜியோ சினிமாவில் வெளியானது. இந்த வெப் சீரிஸ் தாக்கத்தில் கொள்ளை முயற்சியில் இறங்கியதா தெரிவித்த இந்த இளைஞர்கள், காவல்துறை வசமிருந்து தப்பிப்பதற்கான இதர யோசனைகளை யூடியூப் வீடியோக்களில் தேடி கண்டடைந்துள்ளனர்.

முகமூடி மூலம் அடையாளத்தை மறைப்பது, வாகன எண்ணை மாற்றுவது, சிசிடிவி கேமிராக்கள் பார்வையிலிருந்து தப்பிப்பது உள்ளிட்ட நிழல் காரியங்கள் பலவற்றையும் நிகழ்த்த, வெப் சீரிஸை பலமுறை ஓடவிட்டு குறிப்புகள் எடுத்து நடைமுறையில் இறங்கி உள்ளனர். ஆனால், போதிய அனுபவமின்மையாலும், காவல்துறையின் அறிவியல்பூர்வமான தடயவியல் பரிசோதனைகளும் கொலைகள் மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட இரு இளைஞர்களையும் எளிதில் கைதாக வழி செய்திருக்கிறது.

x