காணாமல் போன மகாராஷ்டிரா பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் சனா கானை அடித்துக் கொலை செய்து ஆற்றில் வீசியதாக அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் சனா கான். இவர் பாஜக சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவராக இருந்தார். இவரது கணவர் அமித் என்ற பப்பு சாஹு மதுபானம் கடத்தும் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் ஜபல்பூர் அருகே சாலையோர உணவகத்தை அவர் நடத்தி வந்தார்.
ஆக.1-ம் தேதி தனது கணவர் அமித்தை சந்திக்க ஜபல்பூர் செல்வதாக சனா கான் கூறிவிட்டுச் சென்றார். அவர் பேருந்தில் ஊருக்குச் சென்ற பின், மறுநாள் ஜபல்பூரை அடைந்ததும், தன் தாயை போனில் தொடர்பு கொண்டார். இதன் பின் சனா கான் தரப்பில் இருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவரது குடும்பத்தினர் போனில் தொடர்பு கொண்டனர். ஆனால், சனாவைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதுதொடர்பாக சனா கானின் தாயார் அளித்த புகாரின் பேரில், காவல்துறை வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வந்தனர். இந்த நிலையில், நிதிப்பிரச்சினை காரணமாக சனாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே தகராறு இருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அமித்தை பிடித்து போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர்.
அப்போது தனது மனைவி சனா கானை அடித்துக் கொலை செய்து ஆற்றில் வீசி விட்டதாக அமித் கூறியதால் போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். தனக்கும், சனாவிற்கும் பணப்பிரச்சினை இருந்து வந்ததாகவும், வாக்குவாதம் முற்றிய போது தடியால் தாக்கியதில் அவர் இறந்து விட்டதாகவும், அதனால் அவரது உடலை ஜபல்பூரிலிருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹிரன் ஆற்றில் வீசிவிட்டதாகவும் அமித் கூறினார்.
இதையடுத்து ஜபல்பூர் மற்றும் நாக்பூர் போலீஸார் கூட்டு நடவடிக்கையில் அமித் என்ற பப்பு சாஹூ கைது செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கில் ஜபல்பூரில் உள்ள கோரா பஜார் பகுதியில் இருந்து மற்றொரு நபரையும் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அத்துடன் சனா கானின் உடலை மீட்கும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பாஜக பெண் தலைவர் கணவரால் அடித்துக் கொலை செய்யப்பட்டு உடல் ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.