மகனுடன், தாய் வீட்டிற்கு சென்ற பெண் விபத்தில் உயிரிழந்த நிலையில், அவரது இறுதி சடங்கில் பங்கேற்க வந்த மகன் கார் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டம் ஜாத்ரி கிராமத்தை சேர்ந்தவர் ராணி தேவி(55). இவரது கணவர் இறந்த நிலையில் இவருக்கு 3 மகன், 3 மகள் உள்ளனர். மகன்கள் இருவருடன் ஜாத்ரி கிராமத்தில் வசித்து வந்த ராணி தேவி, தனது தாயின் வீட்டிற்கு செல்வதற்காக மகன் சன்னியுடன் பைக்கில் சென்றுள்ளார்.
தபேரா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த இவர்கள் பைக் மீது எதிரே வந்த பைக் ஒன்று மோதியது. இதில் தாயும், மகனும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக ரேவா பகுதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ராணி தேவி இறந்து போனார்.
இந்த செய்தியை அறிந்த இந்தூரில் வசித்து வந்த ராணி தேவியின் மற்றொரு மகன் சூரஜ், தன் தாயின் முகத்தை கடைசியாக ஒரு முறை பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன், நண்பர் அபிஷேக் சிங்குடன் காரில் கிளம்பியுள்ளார்.
ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேர் பயணித்த இந்த கார், சாட்னா மாவட்டம் ராம்பூர் ப்கேலன் பகுதியில் வந்து கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியது. இதில் சூரஜ் உள்ளிட்ட காயமடைந்த மூவரும் ரேவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு சூரஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இறந்த தாயின் முகத்தை இறுதியாக பார்க்க வந்த மகனும் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் ஜாத்ரி கிராமத்தை மக்களை அதிர்ச்சியடைய செய்தது. இதனை தொடர்ந்து தாய் மற்றும் மகன் இருவரது உடலும் ஒரே இடத்தில் எரியூட்டப்பட்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.