திருப்பதியில் உள்ள திருமலையில் சிறுத்தை தாக்கி 6 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம், திருப்பதியில் உள்ள திருமலைக்கு நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரையாக நேற்று சென்றனர். அப்போது நரசிம்ம சுவாமி கோயில் அருகே அலிபிரி நடைபாதையில் அவர்கள் இரவு 7 மணியளவில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த குழுவில் இருந்த அக்சிதா என்ற 6வயது சிறுமி காணாமல் போனார்.
இதனால் அவரது தந்தை தினேஷ் உள்பட பலர் சிறுமியைத் தேடினர். ஆனால், சிறுமியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் திருமலை போலீஸில் புகார் செய்தனர். இதையடுத்து சிறுமியை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர். இரவு நேரம் என்பதால் தேடுதல் பணி பாதிக்கப்பட்டது.
இந்நிலையில, திருமலைக்கு செல்லும் நடைபாதையில் 7வது மைலில் ரத்தக்கறைகள் இன்று காணப்பட்டது. இதனால் அப்பகுதியில் போலீஸார் தேடிய போது, சிறுமி அக்சிதா சிறுத்தை தாக்கி உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து சிறுமி உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை தினேஷ் கூறுகையில், "திருமலையில் நடைபாதையில் ஏறும் போது, சில படிகள் முன்னால் இருந்த பிஸ்கட் பாக்கெட் வாங்க அக்சிதா சென்றாள். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், அவள் முன்னால் இருப்பதாக நாங்கள் நினைத்தோம், ஆனால் சிறிது நேரம் கழித்து நாங்கள் அவளைத் தேடிய போது காணாமல் போனது தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸிலிலும் புகார் தெரிவித்தோம். இந்த நிலையில் சிறுத்தை தாக்கி எனது மகள் இறந்து கிடந்ததாக போலீஸார் கூறுகின்றனர்" என்று கண்ணீருடன் கூறினார்.
இந்த சம்பவம் திருமலைக்கு வரும் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.