சிறார்களை தீண்டும் சாதி வெறி நாங்குநேரி கொடூரத்தை கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாநிலம் முழுவதும் ஆகஸ்ட் 16-ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பள்ளிச் சிறுவர்கள் மீது சக மாணவர்களே நிகழ்த்தியுள்ள சாதிய வன்கொடுமை சமூகம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதை எடுத்துச் சொல்கிறது.
பள்ளி மாணவர் சின்னத்துரை, அவரது தங்கை ஆகிய இரண்டு பேரும் வெட்டுப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சாதி வெறியூட்டப்பட்டு வன்கொடுமைகள் செய்த மாணவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் தாயார் அம்பிகாவுடன் தொலைபேசியில் பேசியிருப்பதும், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு ஆகியோர் நேரடியாக மருத்துவமனை சென்று ஆறுதல் தெரிவித்ததும் சிறந்த நடவடிக்கைகள் ஆகும். உண்மையில் இது அரசு மற்றும் காவல்துறை நிர்வாகத்திற்கும் பொது சமூகத்திற்கும் பலமான செய்தியாகும்.
ஏனெனில், இது தாக்கியவர்களுக்கும் தாக்கப்பட்டவர்களுக்குமான தனிப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல.அதே நேரத்தில் வன்கொடுமைகள் நடக்கிற போது மட்டும் கவலைப்படுவது மட்டும் போதுமானதல்ல. கல்வியையும்,அறிவியல் சிந்தனைகளையும் ஊடறுத்து சாதி வெறி தாண்டவமாடுகிறது. சாதிய சமூகத்தின் நீட்சியாக கல்வி நிலையங்கள் மாறி வருகின்றன.அறிவாயுதம் ஏந்த வேண்டிய மாணவர்கள் அரிவாள் ஏந்துவதை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்கிற அக்கறையுடன் அரசும்,அரசியல் கட்சிகளும்,கல்வி நிலையங்களும் இப்பிரச்சினையில் கவனம் கொள்ள வேண்டும்.
இனியும் இது போன்ற வன்கொடுமைகளை வழக்கமான ஒன்றாக கருதுவோம் என்றால் தமிழ் சமூகம் சாதிக்கு மாபெரும் விலையைக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். எனவே அரசும் காவல்துறையும் இப்பிரச்சினையில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
சட்டப்படியான தண்டனைகளை உறுதி செய்திட வேண்டும்.பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிவாரணத்தையும்,நீதியையும் உறுதி செய்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறோம். மேலும் இச்சம்பவத்தை கண்டித்து ஆகஸ்ட் 16-ல் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" எனவும் கூறியுள்ளனர்.