பெண் காவலரின் பைக்கை பயன்படுத்தி வழிப்பறி.... முன்னாள் ஊர்காவல் படை வீரர் கைது


பாலாஜி

பெண் காவலரின் பைக்கை பயன்படுத்தி போலீஸ் போல் நடித்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த முன்னாள் ஊர்காவல் படை காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்(30). இவர் சென்னை முகப்பேர் கிழக்கில் தனது நண்பர்களுடன் வாடகை வீட்டில் தங்கி தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஜூலை 27-ம் தேதி மணிகண்டன் தனக்குத் தெரிந்த ஒரு பெண்ணை ஆட்டோவில் கோயம்பேடு வர வைத்து பின்னர் அங்கிருந்து மெட்ரோ ரயிலில் அரும்பாக்கம் சென்றுள்ளார்.

அங்கு ஒரு தங்கும் விடுதிக்கு அந்த பெண்ணை அழைத்து சென்று ஜாலியாக இருந்துவிட்டு பின்னர் அந்த பெண்ணை தங்கும் விடுதியில் இருந்து ஆட்டோவில் அனுப்பி வைத்துள்ளார். மணிகண்டன் பெண்ணை ஆட்டோவில் அனுப்புவதை பார்த்த ஒருவர் நேராக அவரிடம் சென்று, நான் போலீஸ், பெண்ணை அழைத்து வந்து என்ன செய்தாய் என எனக்குத் தெரியும், உனது பெற்றோர் செல்போன் எண்ணைக் கொடு என மிரட்டியுள்ளார்.

பின்னர் அந்த நபர் மணிகண்டன் செல்போனில் ஜிபே மூலம் இருந்து ரூ.15 ஆயிரம் பறித்து கொண்டு நான் கூப்பிடும் போது வரவேண்டும் என கூறி அனுப்பி வைத்தார். சில நாட்கள் கழித்து அதே நபர் மீண்டும் மணிகண்டனை மிரட்டி உதவி ஆணையர், இன்ஸ்பெக்டருக்கு பணம் கொடுக்க வேண்டும் என கூறி ஜிபே மூலம் 65 ஆயிரத்தை பறித்து கொண்டார். ஆகஸ்ட் 2-ம் தேதி அதேபோல் மணிகண்டனை மிரட்டி அவரிடமிருந்து ரூ.12,500 பணம், 4 கிராம் தங்க மோதிரத்தை பறித்து கொண்டார்.

மீண்டும் அந்த நபர் பணம் கேட்டு மிரட்டியதால் சந்தேகமடைந்த மணிகண்டன் இதுகுறித்து சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீஸார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அந்த நபர் வந்து சென்ற இருசக்கர வாகன எண்ணை கண்டுபிடித்து விசாரணை நடத்தினர். அந்த நபர் பயன்படுத்திய இருசக்கர வாகனம் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் சட்ட ஒழுங்கு பிரிவில் பணியாற்றி வரும் காவலூர் அனுசுயாவுக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார், காவலர் அனுசியாவிடம் விசாரணை நடத்தினர். தன்னுடைய இருசக்கர வாகனத்தை சூளைமேட்டைச் சேர்ந்த பாலாஜி(28) என்பவர் பயன்படுத்தி வருவதாகவும், அவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வருவதும் தெரியவந்தது.

அத்துடன் அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் தங்கியிருந்ததும், 2016-ம் ஆண்டு ஊர்க்காவல் படையில் பணியாற்றிய பாலாஜி பணியை விட்டதுடன் ஆன்லைன் சூதாட்டித்திற்கு அடிமையாகி வழிப்பறி செய்த பணத்தை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, தலைமறைவாக இருந்த பாலாஜி கைது செய்த போலீஸார் வழிப்பறி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவின் வழக்குப்பதிவு செய்து பின்னர் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

x