நடுரோட்டில் பட்டப்பகலில் நகை வியாபாரியை கத்தியால் குத்திவிட்டு ஒரு கிலோ தங்கம், 5 லட்சத்துடன் மர்ம நபர்கள் தப்பியோடிய சம்பவம் திருவள்ளூரில் நடந்துள்ளது.
சென்னை கொண்டித்தோப்பை சேர்ந்தவர் சேஷராம். இவர் திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு நகைக்கடைகளுக்கு நகைகளை விற்பனை செய்து வருகிறார். வழக்கம்போல் திருவள்ளூரில் இருந்து சென்னைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். செவ்வாபேட்டை அருகே உள்ள தொழுவூர் வந்தபோது 6 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்தது. அத்துடன் அவரைக் கத்தியால் குத்திவிட்டு ஒரு கிலோ தங்கம் மற்றும் 5 லட்ச ரூபாயை அந்த கும்பல் பறித்துச்சென்றது.
இந்த நேரத்தில் செவ்வாப்பேட்டை சுடுகாடு பக்கம் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவலர்கள், சந்தேகத்தின் பேரில் அவர்களைப் பிடித்து விசாரணை செய்தனர். அவர்களிடம் சோதனை நடத்தியபோது நகை மற்றும் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது, கும்பல் இரு சக்கர வாகனத்தில் தப்பியுள்ளது.
இதையடுத்து அவர்களை வாகனம் மூலம் காவல்துறையினர் விரட்டிச் சென்று இருவரை பிடித்தனர். தப்பியோடிய நான்கு பேரில் மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தற்போது தப்பியோடிய 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடுரோட்டில் நகை வியாபாரியை தாக்கி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.