ராஜஸ்தான்: அஜ்மீரில் சரக்கு ரயிலை கவிழ்ப்பதற்காக தண்டவாளத்தில் 70 கிலோ எடையுள்ள இரண்டு சிமெண்ட் கற்களை வைத்த சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. சிமென்ட் கற்கள் மீது மோதிய போதிலும், ரயில் எந்த சேதமும் இன்றி பயணத்தை தொடர்ந்தது.
ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணியளவில் ஃபுலேரா-அகமதாபாத் பாதையின் சரக்கு வழித்தடத்தில் சரத்னா மற்றும் பங்கட் ரயில் நிலையங்களுக்கு இடையில் 70 கிலோ எடை கொண்ட இரு சிமென்ட் கற்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த கற்கள் மீது மோதினாலும், ரயிலுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை.
இதுகுறித்து ரயில்வே ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் ரயில்வே சட்டம் மற்றும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் எப்ஐஆர் பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
போலீஸார் அந்த இடத்தை அடைந்து தேடியபோது ஒரு தடுப்பு உடைந்து கிடந்தது தெரிந்தது. இரண்டாவது சிமென்ட் கல்லும் அதே பாதையில் சிறிது தூரத்தில் கிடந்தது.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமையன்று பிரயாக்ராஜில் இருந்து ஹரியானா மாநிலம் பிவானிக்கு சென்று கொண்டிருந்த காளிந்தி எக்ஸ்பிரஸ் ரயில், கான்பூரில் உள்ள ரயில் பாதையில் வைக்கப்பட்டிருந்த எல்பிஜி சிலிண்டர் மீது மோதியது. ஆனாலும் அதிர்ஷ்டவசமாக பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது.
சிலிண்டர் மீது மோதியதால் ரயில் நிலைதடுமாறியது. ரயில் பாதையில் சிலிண்டரையும், பெட்ரோல் பாட்டில், தீப்பெட்டி உள்ளிட்ட சந்தேகத்திற்கிடமான பொருட்களையும் கண்டதும் லோகோ பைலட் எமர்ஜென்சி பிரேக்கை போட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து கான்பூர் காவல்துறையினர் எஃப்ஐஆர் பதிவு செய்து, இதுவரை ஆறு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.