சேலத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஏ.சி.யில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு தீயை அணைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், நோயாளிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
சேலம் அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் உள் மற்றும் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நேரத்தில் 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்படியான நிலையில் சேலம் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் அவசர சிகிச்சை பிரிவு முழுவதும், புகை மூட்டம் ஏற்பட்டது. நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் அலறியடித்து கூச்சலிட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பணியாளர்கள், நோயாளிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
முதல் தளத்தில் ஏசியில் இருந்து ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த செவ்வாய்பேட்டை தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.