புட்லூர் ரயில் நிலையத்தில் பகீர்! மனைவி கண்முன்னே கணவன் கழுத்தறுத்துக் கொலை


புட்லூர் ரயில் நிலையம்

திருவள்ளூர் அருகே உள்ள புட்லூர் ரயில் நிலையத்தில் மனைவியுடன் ரயிலுக்காக காத்திருந்த கணவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கார்த்திக்(25). தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்த இவர் நேற்று இரவு தனது மனைவியுடன் புட்லூர் ரயில் நிலையத்தில் நடைமேடை இரண்டில் ரயிலுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு மது போதையில் வந்த 23 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் கார்த்திக் உடன் வீண் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது, அந்த வாலிபர் திடீரென தன் கையில் வைத்திருந்த பிளேடை எடுத்து கார்த்திக்கின் முகம், கழுத்தில் சரமாரியாக அறுத்து‌விட்டு அவ்வழியாக வந்த ரயிலில் ஏறி தப்பிச் சென்றார்.

கணவர் ரத்த வெள்ளத்தில் விழுந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் கணவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கார்த்திக் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இக்கொலை சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயில் நிலையத்தில் மனைவியுடன் காத்திருந்த வாலிபர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x