வாட்ஸ்-அப் அட்மின்கள் உஷார்... இனி போலி செய்தி பரப்பினால் 3 வருஷம் ஜெயில்!


போலி செய்திகள்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாரதிய நாய சனிதா மசோதா, 2023ஐ மக்களவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார். இம்மசோதாவின்படி, இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் 'போலி செய்திகள் அல்லது தவறான தகவல்களை' பரப்புபவர்களுக்கு பிரிவு 195-ன் கீழ் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

இந்திய குடிமக்களுக்கு நீதி வழங்குதல் மற்றும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உரிமைகளைப் பாதுகாப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட மூன்று மசோதாக்களை உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்தார். மறுஆய்வுக்காக நிலைக்குழுவுக்கு இந்த மசோதா அனுப்பப்பட்டுள்ளது.

இந்திய தண்டனைச் சட்டம், 1860க்கு பதிலாக பாரதிய நாய சனிதா மசோதா, 2023. குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1898க்குப் பதிலாக பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மசோதா, 2023 மற்றும் இந்திய சாட்சியச் சட்டம், 1872க்கு பதிலாக பாரதிய சக்‌ஷவா மசோதா, 2023 ஆகியவை முன்வைக்கப்பட்டுள்ளன. இவை நடைமுறைக்கு வந்தால் பழைய சட்டங்கள் ரத்து செய்யப்படும்.

மசோதாக்களை அறிமுகப்படுத்திய அமித் ஷா, குடிமக்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அனைத்து உரிமைகளையும் பாதுகாப்பதே இந்த மூன்று புதிய சட்டங்களின் ஆன்மாவாக இருக்கும் என்றார்.

அமித் ஷா

பாரதிய நியாய சன்ஹிதா மசோதா, 2023ன் பிரிவு 195 (1) d யின் படி, "... இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு அல்லது பாதுகாப்பிற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் போலியான அல்லது தவறான தகவல்களை வெளியிட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்" என்று குறிப்பிடுகிறது.

'பொது அமைதிக்கு எதிரான குற்றங்கள்' என்பதன் கீழ் புதிதாக முன்மொழியப்பட்ட மசோதாவின் அத்தியாயம் 11-ன் கீழ் 'குற்றச்சாட்டுகள், தேசிய ஒருமைப்பாட்டிற்கு பாதகமான வலியுறுத்தல்கள்' என்ற தலைப்பில் இந்த பிரிவு உள்ளது. முன்னதாக, இந்திய தண்டனைச் சட்டத்தின் 153பி பிரிவின் கீழ் 'குற்றச்சாட்டுகள், தேசிய ஒருமைப்பாட்டுக்கு பாதகமான வலியுறுத்தல்கள்' தொடர்பான விதிகள் இருந்தன.

சமூக வலைத்தளங்களில் பதிவிடும் செய்திகளும் இந்த சட்டத்தின் கீழ் வரும் என்பதால், தனி நபரை விட, வாட்ஸ்-அப் குழுக்களின் அட்மின் அதிகளவில் இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். ஏழரையை இழுத்து விடும் ஆட்களை குழுவில் சேர்ப்பதைப் பலரும் இப்போதே தவிர்த்து வருகிறார்கள்.

x