மைசூரில் தனது பைக்கை உரசியதாக கேஎஸ்ஆர்டிசி பஸ் டிரைவர், நடத்துநரை தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகா மாநிலம், மைசூர் ஜிஎன் சாலையில் உள்ள அம்பேத்கர் வட்டம் அருகே அரசு போக்குவரத்து கழக (கேஎஸ்ஆர்டிசி) பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது டூவீலரில் வந்த ஷாரூக் என்ற வாலிபர், பேருந்தை வழிமறித்து தடுத்து நிறுத்தினார். அத்துடன் தனது டூவீலரை பேருந்து உரசியதாக ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பேருந்தில் ஏறி ஓட்டுநரின் சட்டையைப் பிடித்து தகராறு செய்தார்.
தகராறு முற்றியதில், ஓட்டுநரை பேருந்தில் இருந்து இழுத்துப் போட்டு சாலையில் வைத்து தாக்குதல் நடத்தினர். இதைத் தடுக்கச் சென்ற பேருந்து நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவரையும் தாக்கினார். இதனால் அவர்கள் இருவரும் சாலையில் கட்டி உருண்டு சண்டை போட்டனர். அப்போது சாலையில் செல்பவர்கள் அவர்களை விலக்கி விட்டனர்.
இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த லஷ்கர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஷாரூக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.