காட்டிக்கொடுத்த கைரேகை... 8 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலையில் சிக்கிய சிறைப் பறவை!


கைது

மதுரையில் கோயில் பொருட்களை திருடுவதற்காக காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 ஆண்டுகளுக்கு பின் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். கைரேகை ஒப்பீட்டு முறையில் வேறொரு குற்றவழக்கில் சிறையில் இருந்த கைதியை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறைக் கைதி கைது

மதுரை மாவட்டம் ராஜகம்பீரத்தில் மீனாட்சி நகரில் உள்ள ஸ்ரீ தண்டினி (எ) ஆனந்த வாராஹி அம்மன் கோயிலில் ராஜகம்பீரத்தை சேர்ந்த கல்லாணை என்பவர் வாட்ச்மேனாக வேலை பார்த்துவந்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதியன்று காலையில் கோயிலில் உதவியாளராக இருந்த ரவிச்சந்திரன், கல்லாணையை அழைத்தபோது எந்தவித சத்தமும் இல்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து தன்னிடம் இருந்த மற்றொரு சாவியை கொண்டு கேட் கதவை திறந்து பார்த்த போது கல்லாணையின் வலது பக்க தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.

கோயிலில் உள்ள அறையில் இருந்த இரண்டு பீரோவும் சாவி வைத்து திறக்கப்பட்டு அதன் உள்ளே லாக்கர்கள் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த பட்டுத்துணிகள் புடவைகள் சிதறிக்கிடந்துள்ளது. கோயிலில் இருந்த CCTV கேமரா, மூன்று மாணிடர் மற்றும் DVR BOX உள்ளிட்டவைகள் கொள்ளை போயிருந்தது.

இதனையடுத்து கோயில் வாட்ச்மேன் கல்லாணையை ஆயுதத்தால் தாக்கி கோயிலில் உள்ள பொருட்களை கொள்ளை அடித்ததது தொடர்பாக ஒத்தக்கடை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்

இந்த வழக்கில் கடந்த 8 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்றுவந்த நிலையில் சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட கைரேகைகளை NAFIS மென்பொருளின் மூலம் போலீஸார் ஒப்பீடு செய்து பார்த்தனர்.

இந்த கை ரேகையானது திண்டுக்கல் மாவட்டம், காவல் நிலையத்தில் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட குற்றவாளியான திருச்சி மாவட்டம் வடக்கு காட்டூர் பகுதியை சேர்ந்த நிர்மல்ராஜ் (எ) அனில் குமார்(30) என்பவருடைய விரல் ரேகையுடன் பொருந்தியது. இதனடிப்படையில் மதுரை மத்திய சிறையில் தண்டனை சிறைவாசியாக இருந்து வந்த நிர்மல்ராஜ் (எ) அனில்குமாரை கைது செய்து, மதுரை மாவட்டம் மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற உத்தரவுப்படி காவல்துறை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.

8 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஆதாய கொலை வழக்கில், சம்மந்தப்பட்ட குற்றவாளியை விரல் ரேகை அடிப்படையில் உறுதிசெய்த விரல் ரேகை பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மற்றும் சார்பு ஆய்வாளர் ஆகியோர்களுக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் பாராட்டு தெரிவித்தார்.

x