அதிர்ச்சி! சிறுவனின் கழுத்தை நெரித்து பெட் பாக்ஸில் வைத்த டான்ஸ் டீச்சர்... தலைநகரை பதறவைத்த கொலை


சிறுவனின் தாய் நீலு

டெல்லியில் ‘பெட் பாக்ஸ்’ உள்ளாக துணியோடு துணியாக உயிரோடு பதுக்கப்பட்ட சிறுவன், சிகிச்சை பலனின்றி இறந்துள்ளான். சிறுவன் மர்ம மரணத்தின் பின்னணியில் அவனது டான்ஸ் டீச்சரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டெல்லியின் இந்தர்புரி பகுதியில் வசிப்பவர் நீலு. கருத்துவேற்றுமை காரணமாக கணவர் ஜிதேந்திராவிடம் பிரிந்து, 11 வயதாகும் மகன் திவ்யான்ஷ் உடன் நீலு தனியாக வசித்து வருகிறார்.

நேற்று மாலை 6.30 மணிக்கு வீடு திரும்பிய தாய் நீலு, மகன் திவ்யான்ஷ் வீட்டில் இல்லாதது கண்டு திகைத்தார். டான்ஸ் டீச்சர் பூஜா என்பவர், ’உங்கள் மகனைக் காணோம் என்பதால் இன்று வகுப்பு இல்லை’ என தகவல் பகிர்ந்திருக்கிறார். எனவே, குடியிருப்பிலும், அதன் அருகமை பகுதியில் சிறுவன் புழங்கும் இடங்களிலும் சென்று நீலு தேடியலைந்தார். துணைக்கு கணவன் மற்றும் சகோதரனையும் நீலு அழைக்க, உடன் வசிப்போரும் சேர்ந்துகொள்ள அனைவருமாக சிறுவனைத் தேட ஆரம்பித்தனர்.

அப்போதுதான், சிறுவனின் காலணி வீட்டிலேயே இருப்பதன் அடிப்படையில், வீட்டைவிட்டு சிறுவன் எங்கேயும் சென்றிருக்க வாய்ப்பில்லை என சிலர் தெரிவிக்கின்றனர். மேலும், வீட்டினுள் சில பொருட்கள் வைத்த இடத்தில் இல்லாதது கண்டு நீலு சந்தேகமடைகிறார்.

குறிப்பாக படுக்கையின் விரிப்பு கசங்கியிருப்பதோடு, அதன் மீது தேவையில்லாத பொருட்கள் செயற்கையாக கிடத்தப்பட்டிருப்பதும் தெரிகிறது. உடனே உள்ளுணர்வு உந்த படுக்கையை உயர்த்தி உள்ளிருக்கும் பெட்டியை ஆராய்கிறார். ’பெட் பாக்ஸ்’ எனப்படும், உள்ளறை பெட்டியோடு இணைந்த மெத்தை அது.

பெட் பாக்ஸ்

’பெட் பாக்ஸ்’ உள்ளே அடுக்கப்பட்டிருந்த துணிகள் கலைந்திருப்பதை பார்த்ததும், துடிக்கும் இதயத்தோடு நீலு துணிகளுக்கு மத்தியில் துழாவினார். அவர் சந்தேகப்பட்டது சரிதான்! அங்கே குற்றுயிரும் குலையுயிருமாக மகன் துடித்துக்கொண்டிருந்தான். அவசரமாக அவனை அள்ளிப்போட்டுக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார்கள்.

ஆனால் அதற்குள் தாயில் கரங்களிலேயே சிறுவன் மெல்ல மூச்சடங்கிப்போனான். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவன் இறந்ததை உறுதி செய்ததோடு, கழுத்திலிருந்த நகக்குறி காரணமாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கின்றனர். சிறுவன் பெட் பாக்ஸ் உள்ளே பதுக்கப்படும் முன்னராக, கழுத்தை நெரித்து கொலை முயற்சிக்கும் ஆளாகி இருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

அடுத்தக்கட்ட போலீஸ் விசாரணையின் நிழல், டான்ஸ் டீச்சரான பூஜா என்பவர் மீது படிந்திருக்கிறது. சிறுவனின் பெற்றோரான நீலு - ஜிதேந்திரா தம்பதியுடன் டான்ஸ் டீச்சர் பூஜாவை இணைக்கும் முக்கோணத்தில் ஏதோ மர்மம் பொதிந்திருப்பதாக கணித்த போலீஸார், சிறுவனின் கழுத்தை நெரித்து பெட் பாக்ஸில் பதுக்கியதாக டான்ஸ் டீச்சர் பூஜாவை வளைத்து விசாரித்து வருகின்றனர்.

x