சாதி மோதல் காரணமாக சக மாணவர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் சின்னத்துரையின் தாயார் அம்பிகாபதியிடம் முதல்வர் ஸ்டாலின் தொலைப்பேசி வாயிலாக நலம் விசாரித்தார்.
நெல்லை மாவட்டம், வள்ளியூர் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வரும் நாங்குநேரியைச் சேர்ந்த பட்டியல் இன 12-ம் வகுப்பு மாணவனுக்கும் அதே பள்ளியில் படித்து வரும் மாற்று சமூகத்தை சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, சாதிய ரீதியான பிரச்சினையாக மாறியுள்ளது.
நாங்குநேரி பகுதியில் உள்ள பட்டியலின மாணவரின் வீட்டிற்குள் புகுந்து 12ம் வகுப்பு மாணவன் மற்றும் அவரது சகோதரியை அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவத்தில் 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த மாணவர் சின்னதுரை மற்றும் அவரது சகோதரி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் இன்று நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சின்னத்துரை,அவரது தங்கை மற்றும் குடும்பத்தினரை சபாநாயகர் அப்பாவு, நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறி நலம் விசாரித்தனர்.
பின்னர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவனிடம் உடல் நலம் விசாரித்தார். மேலும் அவரது தாயார் அம்பிகாபதியிடம் தொலைப்பேசி மூலம் நலம் விசாரித்தார். அப்போது சின்னத்துரையின் தாயார் அம்பிகாபதியிடம் பேசிய முதல்வர், “ எதற்கு கவலைபடாதீங்க, தைரியமா இருங்க. நான் இருக்கிறேன் நமது அரசு உங்களுடன் இருக்கும்” என ஆறுதல் கூறினார்.