கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து அதிகளவில் கஞ்சா விற்பனை நடைபெறுவதால் குமரி மாவட்ட மக்கள் கலக்கமடைந்துள்ள நிலையில் கஞ்சா வியாபாரிகள் 3 பேர் போலீஸாரிடம் சிக்கியுள்ளனர்.
சுற்றுலாத்தலங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள், உள்ளூரைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களைக் குறி வைத்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை சமூக விரோதிகள் விற்பனை செய்து வருகின்றனர். இது போன்ற போதை வஸ்துகளால் தன் நிலை மறந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பான புகார்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்தாலும் முழுமையாக குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை அவர்களால் கட்டுப்படுத்தப்பட முடியவில்லை.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே பைங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் கஞ்சா புழக்கம் உள்ளதாக மாவட்ட காவல்துறைக்கு புகார்கள் சென்றது. இதை தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்திரவுப்படி புதுக்கடை சப் இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீஸார் நேற்று மாலையில் பைங்குளம் அருகேயுள்ள அம்சி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஒரு புல்லட் பைக்கில் 3 பேர் வந்தனர்.
அவர்களை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது சுமார் 260 கிராம் கஞ்சா மற்றும் சிறிய தராசு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
இதனை தொடர்ந்து காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தூத்தூரை சேர்ந்த ஆகாஷ்(22), மஜோப் (25) மற்றும் இனையம் புத்தந்துறையை சேர்ந்த சகாய சுபின்(22) என்பதும், இந்த கும்பல் பள்ளி மற்றும் கல்லுரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதும் தெரிய வந்தது. இதில் ஆகாஷ் மற்றும் மஜோப் ஆகிய இருவரும் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.