தென்காசி: அரிவாளுடன் மின் ஊழியரை வெட்ட துரத்திய பெண்!


கையில் அரிவாளுடன் மின் ஊழியரை மிரட்டும் பெண்

மூதாட்டியின் வீட்டிற்கு மின் இணைப்பு கொடுக்கச் சென்ற மின் ஊழியரை பக்கத்து வீட்டு பெண் அறிவாளால் தாக்க முயன்ற சம்பவம் ஆழ்வார்குறிச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள செட்டிகுளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குட்டி மனைவி பூபதி (74), கணவர் உயிரிழந்த நிலையில் தனிமையில் வசித்து வரும் இவர் தனது வீட்டிற்கு மின் இணைப்பு கோரி விண்ணப்பித்துள்ளார். அவரின் மனுவை பரிசீலித்து மின்வாரியத்துறை அதிகாரிகள் மின் இணைப்பு கொடுக்க முன்வந்தனர்.

மின் இணைப்பு கொடுக்கச் சென்ற மின்வாரிய அதிகாரிகளை பூபதி வீட்டிற்கு மின்சார இணைப்பு கொடுக்கக் கூடாது என்று பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் மிரட்டி உள்ளனர். இதனால் மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பு கொடுக்காமல் திரும்பிச் சென்று விட்டனர்.

இதனால் ஏமாற்றம் அடைந்த பூபதி ஆழ்வார்குறிச்சி மின்வாரிய அலுவலகத்தில் மின் இணைப்பு கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பு கொடுக்க உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று காவல்துறையினர் உறுதியளித்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று மாலையில் மின்வாரிய ஊழியர்கள் மூதாட்டி பூபதியின் வீட்டிற்கு மின் இணைப்பு கொடுப்பதற்காக வந்தனர். மின் கம்பத்தில் ஏறி மின் இணைப்பு கொடுத்தனர். அப்போது கையில் அரிவாளுடன் அங்கு வந்த கல்பனா என்ற பெண் தகாத வார்த்தைகளால் மின்வாரிய ஊழியரை திட்டினார்.

முதாட்டி பூபதி

அதுமட்டுமில்லாமல் தான் எடுத்து வந்த அரிவாளை அவர்கள் மீது வீசி எறிந்து அச்சுறுத்தினார். அதையடுத்து இது தொடர்பாக மின்வாரிய ஊழியர்கள் ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

x