இரவில் பகீர்... சாலையோர பள்ளத்தில் தவறிவிழுந்த இளைஞர் உயிரிழப்பு!


இளைஞர் உயிரிழப்பு

சென்னையில் சாலையோர பள்ளத்தில் தவறிவிழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பூந்தமல்லியில் தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையில் மழைநீர் வடிகால் மற்றும் மின்வாரியம் சார்பில் பள்ளம் தோண்டப்பட்டு உயரழுத்த கேபிள் இணைப்பு தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வழியாக ராமகுணா, மதிவாணன் என்ற இரு இளைஞர்கள் தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் இரவு பணிக்காக இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

அப்போது சாலையில் விளக்கு எரியாமல் இருட்டாக இருந்ததால் இரவு பணிக்கு சென்ற இளைஞர்கள் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கினர். இதில் தலையில் பலத்த காயங்களுடன் கம்பிகள் குத்திய நிலையில் ராமகுணா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் சென்ற மதிவாணன் படுகாயமடைந்தார்.

இதனைக் கண்ட அந்த வழியாகச் சென்ற பொது மக்கள் மதிவாணனை மீட்டு பூவிருந்தமல்லி உள்ள அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் உயிரிழந்த ராமகுணா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நெடுஞ்சாலையில் பணிகள் நடைபெறும் பகுதியில் விளக்குகள் எரியாததும், எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்படாததுமே இந்த கோர விபத்துக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இதனிடையே, தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. அதில், பூந்தமல்லி அருகே தடுப்புகள் அமைத்து மின்வாரியம் சார்பில் புதைவிட பணிகள் நடைபெற்றதாகவும் பள்ளம் தோண்டி பணிகள் நடைபெறுவதாக எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டிருந்ததாகவும், விபத்தில் சிக்கிய இளைஞர்கள் மது அருந்தி இருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளதாகவும் மின்வாரியம் விளக்கம் அளித்து இருக்கிறது.

x