'படிக்கணும், ஊர் சுற்ற வரமாட்டேன்'... மறுத்த கல்லூரி மாணவனை கத்தியால் குத்திய நண்பர்கள்!


மாணவனுக்கு கத்திக்குத்து

தங்களுடன் ஊர் சுற்ற வராமல் எப்போதும் படிப்பே கதியாக கிடந்த கல்லூரி மாணவனை, அவனது நண்பர்களே கத்தியால் தாக்கிய சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.

பெங்களூரு விவேக்நகரைச் சேர்ந்தவர் ஆதித்யா. அண்மையில் இவர் இரவு உணவு முடித்து, வளர்ப்பு நாயுடன் சற்று தூரம் காலார சென்றிருக்கிறார். அப்போது, சக மாணவர்கள் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஆதித்யாவை வழி மறித்துள்ளனர். தங்களோடு ஜாலியாக நேரம் செலவிடுமாறும், ஊருக்குள் இரவு உலா செல்லலாம் என்றும் ஆதித்யாவை வற்புறுத்தி உள்ளனர்.

நண்பர்களின் கட்டாயத்துக்கு இணங்காத ஆதித்யா, ’படிக்க வேண்டிய பணி மிச்சமிருக்கிறது; வீடு திரும்பி படிப்பைத் தொடர வேண்டும்’ என்று கூறி அங்கிருந்து அகன்றிருக்கிறார். தங்களை அலட்சியப்படுத்தும் ஆதித்யாவை மடக்கிய நண்பர்கள், ’எப்போது பார்த்தாலும் படிப்பா? இன்றைக்கு எங்களுடன் வந்தே ஆக வேண்டும்’ என வற்புறுத்தியுள்ளனர்.

அவர்கள் பிடியிலிருந்து ஆதித்யா தப்பியோட முயற்சிக்க, இளைஞர்கள் கூட்டாக சேர்ந்து துரத்த ஆரம்பித்திருக்கின்றனர். தப்பியோடிய ஆதித்யா தனது வீட்டுக்குள் நுழைந்த பின்னரும் அவரை கத்தியால் தாக்கியதோடு, அதைத் தடுத்த அவரது குடும்பத்தினரையும் அந்தக் கும்பல் தாக்கியுள்ளது. அக்கம்பக்கம் களமிறங்கியபோது, மூர்க்க இளைஞர்கள் அவர்கள் மீதும் பாய்ந்திருக்கின்றனர்.

இதனையடுத்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததில், அருகிலிருந்த ரோந்து வாகனம் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தது. பெரும்பாலான இளைஞர்கள் தப்பியோட, கல்லூரி இளைஞர்கள் 5 பேர் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளனர். நண்பர்கள் தாக்குதலில் காயமடைந்த ஆதித்யா மற்றும் அவரது தம்பி தனுஷ் மற்றும் சிறியளவில் காயமுற்ற அவர்களின் பெற்றோர் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விவேக் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தங்களுடன் சேர மாட்டேன் என்று ஆதித்யா கூறியதை சக மாணவர்கள் ஈகோ பிரச்சினையாக எடுத்துக்கொண்டதே இந்த களேபரத்துக்கு காரணம் என தெரிய வந்திருக்கிறது. கைதான இளைஞர்கள் இதுவரை குற்ற வழக்குகள் எதிலும் சிக்காதவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

x