'அந்த பையன் ரவுடியாச்சே'... காதலி வீட்டில் போட்டுக் கொடுத்த காண்ட்ராக்டர் கொலை!


காண்ட்ராக்டர் குமார்

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் குமார்(42) என்ற பண்ணையார் குமார். இவருக்கு திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன.இந்நிலையில், இவர் சொந்தமாக ஜேசிபி, லாரி உள்ளிட்டவை வைத்துள்ளார். மேலும் காண்ட்ராக்ட் தொழிலும் செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை பண்ணையார் குமார் வீரவநல்லூர் ரயில் நிலையம் அருகேயுள்ள வீற்றிருந்தான் குளத்திற்குச் சென்றார். இதை நோட்டமிட்ட 5 பேர் கொண்ட மர்மக் கும்பல் 2 பைக்கில் சென்று குமாரை குளத்தில் துரத்தி சென்று சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடி விட்டது. இதில் தலையில் வெட்டுப்பட்ட குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம்குறித்து தகவலறிந்து சென்ற வீரவநல்லூர் போலீஸார், குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,

இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீஸார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் ஒரு மர்மக் கும்பல் குமாரை நோட்டமிடுவதும், பின்னர் அவரை பின் தொடந்து 3 பைக்குகளில் செல்வதும் தெரியவந்தது.

அவ்வாறு 3 பைக்குகளில் சென்ற 5 பேர் குறித்து விசாரித்த போது, அவர்கள், வீரவநல்லூரைச் சேர்ந்த முருகன் மகன் கார்த்திக் (24), கண்ணன் (21), முத்துராஜ், வசந்த் என்ற கொண்டி (21), கொம்பையா (23) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அவர்களைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். அப்போது, கார்த்திக் என்ற நபர், பக்கத்து ஊரான தச்சநல்லூரில் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண்ணும் கார்த்திக்கை தீவிரமாக காதலித்துள்ளார். இதையடுத்து அந்தப் பெண்ணின் தந்தை, வீரவநல்லூர் நண்பரான குமார் என்ற பண்ணையார் குமாரை தொடர்பு கொண்டு, கார்த்திக்கை பற்றி விசாரித்துள்ளார். அதற்கு கார்த்திக் ரவுடித்தனம் செய்து சுற்றி வருவதாகவும், அவருக்கு பெண் தர வேண்டாம் என்று குமார் கூறியதாக தெரிகிறது.

இதனால், பெண்ணின் தந்தை கார்த்திக்கிற்கு தனது மகளைக் கட்டித்தர மறுத்ததாக தெரிகிறது. இந்தத் தகவல் கார்த்திக்கிற்கு தனது காதலி மூலம் தெரியவந்துள்ளது. தன் காதலுக்கு எமனாக வந்த பண்ணையார் குமார் மீது ஆத்திரமடைந்த கார்த்திக் அவரைக் கொல்ல திட்டமிட்டார். இதற்காக சமயம் பார்த்து கார்த்திருந்த அவர், தன் நண்பர்களுடன் சேர்ந்து, குமாரை வெட்டிக் கொன்றது, தெரியவந்தது. இதையடுத்து கார்த்திக் உள்ளிட்ட 5 பேரையும் வீரவநல்லூர் போலீஸார் கைது செய்தனர்.

x