தர்மபுரியில் யூடியூப் சேனல் நடத்துவது தொடர்பாக எழுந்த போட்டியினால் ஆனந்த் என்பவரை தாக்கி காரில் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவரை மீட்ட போலீஸார், 12 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து யூடியூப் சேனல் நடத்தி வருபவர் கார்த்திக் என்ற சின்னச்சாமி. இதே போல் ஆனந்த் என்பவரும் யூடியூப் சேனல் ஒன்றினை அப்பகுதியில் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் யூடியூப் சேனலில் அப்டேட் பதிவிடுவது தொடர்பாக கார்த்திக்கிற்கும், ஆனந்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து தனது நண்பர்களுடன் ஆனந்தின் அலுவலகத்திற்குச் சென்ற கார்த்திக், அவரை சரமாரியாக தாக்கினார்.
மேலும் தாக்குதலுக்குள்ளான ஆனந்தை காரில் கடத்தியும் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த தர்மபுரி போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தர்மபுரி அருகே உள்ள குண்டல்பட்டி என்ற இடத்தில் கடத்தி செல்லப்பட்ட ஆனந்தை மீட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 12 பேரை கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து கார் மற்றும் 70 ஸ்மார்ட் போன்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.