அதிர்ச்சி... நாடு முழுவதும் 7.25 லட்சம் செல்போன்கள் முடக்கம்!


நாடு முழுவதும் சஞ்சார் சாத்தி இணையதளம் மூலமாக 7.25 செல்போன்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் அந்தந்த மாநில அரசுகளின் சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு இணைந்து கடந்த மே மாதம் சஞ்சார் சாத்தி என்ற இணையதளத்தை அறிமுகம் செய்தது. ஏற்கெனவே இருந்த வசதிகளின்படி, திருடப்பட்ட செல்போன்களில் இருக்கும் சிம்கார்டுகள் மட்டும் முடக்கப்பட்டு வந்த நிலையில் செல்போனைகளையே முடக்கும் புதிய வசதி இதன் மூலம் மக்களுக்குக் கிடைத்தது.

மத்திய அரசின் சாதன அடையாள பதிவின் (சிஇஐஆர்) மூலமாக திருடுபோன செல்போன்களை இணையதளம் வாயிலாக முடக்கலாம். இந்த இணையதளம் வாயிலாக இதுவரை 7.25 லட்சம் செல்போன்கள் முடக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் இருந்து மட்டும் 25,135 மொபைல்கள் முடக்கப்பட்டுள்ளது. முடக்கப்பட்ட செல்போனில் புதிய சிம்கார்டு போட்டதும் புகார் அளித்தவர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும். செல்போன் நிறுவனத்துக்கும் எஸ்எம்எஸ் அனுப்பப்படும்.

பழைய செல்போன்களை வாங்கும் போது, அதன் ஐஎம்இஐ எண் மூலம் அது எந்த அளவிற்கு பழையது, திருடப்பட்டதா என்பதையும் இந்த இணையதளத்தின் வாயிலாக அறிந்துக் கொள்ள முடியும். மேலும் இந்த இணையதளம் மூலம் தெலங்கானா மாநிலத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருடுபோன செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் கர்நாடகாவும், ஆந்திராவும் உள்ளன.

x