நக்சல் தம்பதி கைது... பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸார் அதிரடி நடவடிக்கை!


கைது செய்யப்பட்ட கிருபாசங்கர் சிங், பிந்தா சோனா.

நக்சலைட்டுகளுடன் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்ட தம்பதியை பிரயாக்ராஜில் உத்தரப்பிரதேச பயங்கவாத தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

நக்சலைட்டுகள்

உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் தடை செய்யப்பட்ட சிபிஐ(மாவோயிஸ்ட்) அமைப்பைச் சேர்ந்த தம்பதி இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவு (ஏடிஎஸ்) தெரிவித்துள்ளது.

நக்சல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக 7 பேர் மீது ஜூலை 2019-ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அப்போது சிலர் கைது செய்யப்பட்ட போது அவர்களிடமிருந்து மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டன. அதில் கிடைத்த தகவல் அடிப்படையில் தடை செய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) அமைப்பைச் சேர்ந்த கிருபா சங்கர்(49), அவரது மனைவி பிந்தா சோனா என்ற மஞ்சு என்ற சுமன்(41) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராய்பூரில் உள்ள ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் போது கிருபாசங்கர் சிங், பிந்தா சோனாவுடன் தொடர்பு ஏற்பட்டு அவர்கள் திருமணம் செய்து கொண்டதுடன் தடை செய்யப்பட்ட அமைப்பில் சேர்ந்தனர் என்று ஏடிஎஸ் தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடுப்பு பிரிவு

கிருபாசங்கர் சிங்கும், அவரது மனைவி பிந்தா சோனாவும் தடை செய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், தேசத்திற்கு எதிராகப் போர் தொடுக்கும் திட்டங்களில் ஈடுபட்டதாகவும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2017-2018-ம் ஆண்டில் இந்த தம்பதியினர், நக்சலைட் குவாந்தன் சீனிவாசனுக்கு 5 லட்சம் ரூபாய் தந்ததுடன் மஹராஜ்கஞ்ச் கர்மாஹியா கிராமத்தில் தங்குமிடம் அளித்தனர் என்றும், அங்கு அவரை பள்ளியில் தவறான பெயரில் வேலை செய்ய வைத்தனர் என்று ஏடிஎஸ் தெரிவித்துள்ளது.

x