கோவளம் கடலில் படகு கவிழ்ந்து விபத்து - 6 மீனவர்கள் உயிர் தப்பினர்! 


பிரதிநிதித்துவப் படம்.

நாகர்கோவில்: கன்னியாகுமரி அருகே கோவளத்தைச் சேர்ந்தவர் ரெஜி(50). இவருக்கு சொந்தமான நாட்டு படகில் இன்று அதிகாலை கோவளம் கடற்கரையில் இருந்து 6 மீனவர்களுடன் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார்.

கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது பெரிய அலை எழுந்தது. இதில் படகு அலையில் சிக்கி கவிழ்ந்தது. படகில் இருந்த 6 மீனவர்களும் கடலுக்குள் விழுந்து தத்தளித்தனர். அப்போது வலைகள் மற்றும் எந்திரங்கள் கடலில் மூழ்கி சேதமானது. கரையில் இருந்து இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பிற மீனவர்கள், கடலில் நீந்தி சென்று அலையில் சிக்கி கவிழ்ந்த படகையும் 6 மீனவர்களையும் மீட்டு பத்திரமாக கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

கடந்த வாரம் கன்னியாகுமரி மற்றும் கோவளம் கடற்கரை பகுதியில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற இரு வள்ளம் கவிழ்ந்து மீனவர்களையும், அவர்கள் பிடித்து வந்த மீன்களையும் கடல் அலை அடித்துச் சென்றது. கோவளம் கடற்கரை கிராமத்தில் கடல் அலை சீற்றத்தை தடுக்கும் வகையில் தூண்டில் வளைவு இல்லாததால் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நீடிப்பதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே கோவளத்தில் கிழக்கு கடற்கரை பகுதியில் அலைதடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

x