தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் காயமடைந்தனர். பேரூரணியில் மாவட்ட சிறை உள்ளது. இங்கு திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த கைதிகள் சுமார் 200 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மின்விசிறி உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் மின் விசிறிக்கு கீழே காற்று வரும் பகுதியில் தூங்க இடம் பிடிப்பதில் கைதிகளுக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் அங்குள்ள கைதிகள் இடையே மின் விசிறிக்கு கீழே படுப்பதில் போட்டி ஏற்பட்டது. இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. கைதிகள் 10 பேர் இரு தரப்பாக இரவில் மோதிக் கொண்டனர். விருதுநகரை சேர்ந்த கைதிகள் தாக்கியதில் பிற கைதிகள் 6 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர்களை வெவ்வேறு அறைகளுக்கு சிறை அதிகாரிகள் மாற்றினர். இதுகுறித்து டிஎஸ்பிகள் ராமகிருஷ்ணன், சுதிர் ஆகியோர் சிறைக்கு சென்று விசாரணை நடத்தினர். சிறை கண்காணிப்பாளர் அளித்த தகவலின் பேரில் தட்டப்பாறை போலீஸாரும் பேரூரணி சிறைக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.