இணையத்தில் பல்வேறு தேவைகளுக்காக நாம் பிரயேகிக்கும் பாஸ்வேர்டுகளில் அலட்சியம் கூடாது. இதனை மீண்டும் அறிவுறுத்தி உள்ளது ‘நோர்ட்பாஸ்’ ஆய்வறிக்கை.
இணையத்தில் பல்வேறுத் தேவைகளுக்காக ஏராளமான கணக்குகளையும் அவற்றைத் திறப்பதற்கான பாஸ்வேர்டுகளையும் கையாண்டு வருகிறோம். ஆனால் அந்த பாஸ்வேர்டை எத்தனை பாதுகாப்பாக கட்டமைக்கிறோம் என்பது பெரும் கேள்விக்குறியே. நினைவில் இருத்த வசதி, பாதுகாப்பு குறித்த அலட்சியம் உள்ளிட்ட காரணங்களினால், ஊகிக்க மிகவும் எளிதான பாஸ்வேர்டுகளையே பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர்.
இவை இணையத்தில் தேட்டை போட அலையும் ஹேக்கர்களை வெற்றிலை பாக்கு வைத்து வரவழைக்கும்! தனிப்பட்ட தகவல்களை சேமித்திருக்கும் கணக்குகள், தகவல்தொடர்புக்கானவை, வங்கி பரிவர்த்தனை கணக்குகள் உள்ளிட்ட பல ரக கணக்குகளை கையாள்வதில் இந்தியர்கள் வெகு அலட்சியம் காட்டுவதாக நோர்ட்பாஸ் எச்சரித்துள்ளது.
அப்படி பெரும்பாலானோர் கையாளும் பாஸ்வேர்ட் விவரங்களையும் பட்டியலிட்டுள்ளது. அவற்றில், ’123456, admin, password, admin@123, pass@123, india@123, abcd@123, password@123’ உள்ளிட்டவை பல்லாயிரக்கணக்கான பயனர்களால் அலட்சியத்துடன் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றை எந்தவித சிரமமும் இன்றி ஹேக்கர்கள் முதல் நமக்கு வேண்டாதவர்கள் வரை எவரும் மோப்பமிட முடியும்.
பாஸ்வேர்ட் கட்டமைப்பதில் அலட்சியம் காட்டிவிட்டு, பின்னர் தனிப்பட்ட தகவல்கள் முதல் வங்கி இருப்பு வரை இழந்து வருந்துவதில் பயனில்லை. எனவே, பாஸ்வேர்ட் என்பதை அவற்றுக்கான உரிய வழிகாட்டுதல்களுடன் கட்டமைப்பதோடு, குறிப்பிட்ட கால இடைவெளியில் அல்லது ஐயம் எழும்போதெல்லாம் உடனடியாக அவற்றை புதிதாக உருவாக்கி பயன்படுத்துவதே நல்லது.
இதையும் வாசிக்கலாமே...