காரைக்கால்: காரைக்காலில் போலி ஆவணம் தயாரித்து கோயில் நிலத்தை விற்க முயன்ற புகாரில் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
காரைக்கால் கோவில்பத்து பகுதியில் பார்வதீஸ்வரர் தேவஸ்தானத்துக்குச் சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் அரசு மனைப்பட்டா தருவதாகக் கூறி முறைகேட்டில் சிலர் ஈடுபட்டு வருவதாக துணை ஆட்சியர் ஜி.ஜான்சன் காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
மேலும், வருவாய்த் துறை சார்பில் இந்த நிலத்தில் யாருக்கும் மனைப்பட்டா வழங்கவில்லை என்றும், இதற்காக யாரிடமும் பணம் தரவேண்டாம் எனவும் துணை ஆட்சியர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில் புகாரின் பேரில் நகர காவல் நிலைய ஆய்வாளர் புருஷோத்தமன் மற்றும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு, போலி ஆவணங்கள் மூலம் நிலம் விற்பதற்காக புரோக்கராக செயல்பட்ட காரைக்கால் பகுதியைச் சேர்ந்த சிவராமன்(45) என்பவரை நேற்று முன்தினம் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் மேலும் தொடர்புடையோர் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.